Showing posts with label kannaadi pookkal. Show all posts
Showing posts with label kannaadi pookkal. Show all posts

Sunday, June 19, 2011

கண்ணாடிப் பூக்கள்

வசு.... மனதை நெகிழ வைத்த ஓர் கதாபாத்திரம். தலை வாரி விட அம்மா, பள்ளிக்கு செல்ல தேவையான அனைத்தும் எடுத்து வைக்க அம்மா... பள்ளியிலிருந்து திரும்பியதும் முதலில் பார்க்கத்துடிப்பதும் அம்மா.... தன்னுடைய பெஸ்ட் friend அம்மா ... தன் பள்ளியில் நடந்ததை பகிர்ந்துகொள்ள அம்மா... தான் வெற்றிபெற்றதைக் கொண்டாட அம்மா... அம்மா.. அம்மா.. அம்மா.. அம்மா... வசுவின் ஒவ்வொரு மூச்சிலும் பேச்சிலும் அம்மா...

இப்படி அன்பை பொழியும் ஒரு மகனை நெஞ்சிலும், தோளிலும், தாங்கும் அன்பான அம்மாவாய் காவேரி. தன் மூத்தாளின் மகன் என்று எவ்விதத்திலும் மாற்றம் காட்டாது, தன் அன்பையும், பாசத்தையும் கலந்து ஊட்டி, வசு வசு வசு என வசுவின் அன்பிற்கு தன் அன்பு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என நிரூபிக்கும் மற்றொரு கதாபாத்திரம்.

ஆர்பாட்டமான வார்த்தை ஜாலம் ஏதும் இன்றி, நக்கலாய் பேசாது, அமைதியான அன்பான அப்பாவாய் பார்த்திபன்.

திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இன்றி, நம் வீட்டில் நடக்கும் சம்பவங்களைக் கண்முன் காண்பது போன்ற உணர்வு. "இப்படித்தான் நடக்கும்" என நம் எண்ண ஓட்டங்களைத் தடுத்து நாம் நினைக்காதபடி கதை அமைத்து, கனத்த மனத்துடன் கதையுடன் நம்மைப் பயணிக்கச் செய்து, பாராட்டினைப் பெறுகிறார் இயக்குனர் ஷாஜஹான்.

வயிற்றிலிருந்து ஓர் உருண்டை தொண்டை அடைத்து, விழிகளில் அருவியாய் நீர் சொரிய, படம் முழுக்க காவேரியும், வசுவும் நம்மை ஆட்க்கொள்ளுகின்றனர். தான் பெற்றெடுத்த குழந்தையின் மரணத்திற்கு தான் பாசம் காட்டி வளர்த்த வசு தான் காரணம் என்று அறிந்த பின்னும், வசுவின் அன்பைப் புரிந்து கொண்டு, "தெரியாம செஞ்சிட்டேன் மா" என பயத்தில் அழும் மகனின் வாய்ப் பொத்தி, கட்டி அழும் தாயாக வாழ்ந்திருக்கிறார் காவேரி.

குழந்தைகள் செய்யும் தவறு ஒரு வயது வரை, அவரவர் பெற்றோர் செய்யும் தவறுகளினால் நடப்பவையே என்பதை அழகாக உணர்த்தும் குழந்தை மனோதத்துவ டாக்டராக வரும் சரத்பாபு, ஜுவினைல் கோர்ட்டில் அப்பா கோபத்தில் அடித்தது, அம்மா தன்னை பெஸ்ட் friend இல்லை என நிராகரித்தது, அடுத்து வந்த குழந்தை எல்லோருடைய நேரத்தையும், attention எடுத்துக் கொள்ள, தான் வேண்டாதவன் என்ற உணர்வினால் கோபம் கொண்டு, தான் பெயர் வைத்த தன் தம்பி அப்புவின் முகத்தில் தானே பூச்சி மருந்து அடித்தது, அச்செயல் தன் தம்பிக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் என்று அப்பாவியாய் அழுது, சாரி சார் , சாரி சார், சாரி அம்மா, சாரி அப்பா என அனைவரிடமும் கை கூப்பி மன்னிப்பு கேட்டு அழும்போது, நம் கண்களில் இருந்தும் ஊற்றாய் நீர்.

கண்ணாடிப் பூக்கள்! வசு, காவேரியின் பாசம்... கண்ணாடி போன்று எந்நேரத்திலும் விரிசல் ஏற்படக் கூடியது, ஆனாலும், கண்ணாடி பூவாய் மலரச் செய்து, அது உடையாது பார்த்து கதை நகர்த்தியிருப்பது பாராட்டிற்குரியது.

Heavy subject.. இப்படி அம்மாவின் மேல் கரைகாணா பாசம் செலுத்தும் ஒரு மகன் கிடைக்க அந்த தாய் கொடுத்து வைத்தவளா? அல்லது சிற்றன்னை என்ற எண்ணம் துளியும் இல்லாது, பெற்ற மகனை இழக்கக் காரணமாய் இருந்தவன் என்று கோபம் கொள்ளாது, வருத்தத்தை மனதில் புதைத்து, கணவனிடம், என் பழைய வசு எனககு வேணும் என்று கதறி அழும் தாயைப் பெற்ற வசு கொடுத்து வைத்தவனா?

மரத்தைச் சுற்றி சுற்றி பாட்டு, காதல், அந்த காதலுக்காக தாய் தந்தையரை எதிர்த்துப் பேசும் hero, heroine, அயல்நாட்டில் டூயட், பழியே உருவமாய் வில்லன் என பார்த்து பார்த்து சலித்த மனதிற்கு, இப்படம் ஓர் விதிவிலக்கு. பெற்ற பிள்ளையிடம் மட்டுமே இவ்வாறு பாசம் காண்பிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெறாவிட்டாலும் பிள்ளை பிள்ளை தான் என்று உணர்த்தும் படம்.


திரைப்படம் பார்த்து முடித்தும், அதன் தாக்கத்திலிருந்து இன்னும் வெளி வரவில்லை நான், கண்களிலிருந்து வழியும் கண்ணீர் என் புடவையை இன்னும் நனைத்துக் கொண்டு இருக்கிறது. நனையட்டும்!

"ஹலோ friend... உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?
என்ன?
இந்த வேர்ல்ட்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது உன்ன மட்டும் தான்...."
இன்னும் செவிகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது...

Sujatha