விடுமுறைக்காய் தவமிருந்து
உனைக் காணும் உற்சாகத்துடன்
ஓடோடி வருகின்றேன்
என் கிராமத்துக் காதலியே!
நீ வரும் வழியில்
தினம் தவம் கிடந்தேன்
பருவப் பெண்ணிற்கே உரிய
உதட்டோரச் சுழிப்புடன்
எழிலாக நீ வரும் அழகைக் காணவே
பிரம்மன் என் கண்களைப் படைத்தானோ?
என மிகவும் வியந்தேன்!
உனை அள்ளி அணைக்க
மெல்ல நடுங்கும் என் விரல்கள்
எத்தனித்தபோது, பூட்டி வைத்த
உன் அன்பினை முத்தங்களாக்கி
என்னை முழுவதும் நனைத்தாய்!
என் உடலும் உள்ளமும்
சிலிர்த்தது! குளிர்ந்தது!
என் சொந்தம் மறந்தேன்!
சுற்றம் மறந்தேன்!
கவலைகள் மறந்தேன்!
காட்சிகள் மறந்தேன்!
உன் இதமான அணைப்பில்
மனதின் ரணங்கள் கரைந்தன!
வலிகள் பறந்தன!
பஞ்சுப் பொதியைப் போல லேசாகி
விண்ணில் பறந்தது நெஞ்சம்!
குழந்தையைப் போல குதூகலித்தேன்!
ஒரு மௌன நாடகம் போல்
தினம் தினம் நம் சந்திப்பு!
என் மனம் பேசிய வார்த்தைகளை
அன்பான சிநேகிதியாய்
நீ புரிந்து கொண்டாய்!
சிருங்காரமாய் எனக்கு மட்டுமே கேட்க
சங்கீதம் பாடினாய்!
நாட்கள் ஒவ்வொன்றும் கரைந்தன,
இதோ! இன்றோடு முடிகிறது
என் விடுமுறைக்காலம்
உன்னைப் பிரியும் மனதிலே
ஓர் போர்க்கோலம்!
நீ மட்டும் அதே சந்தோஷத்தோடு
துள்ளாட்டம் போடுகிறாய்!
என்னைப் பிரிவதில்
உனக்கு வருத்தமில்லையா?
அல்லது உன் வருத்தம் நான் அறிந்தால்
மனம் உடைவேன் என நடிக்கிறாயா?
"என்னுடன் வந்துவிடு"
என நான் அழைத்தால் அது
இந்த ஊரை மட்டும் அல்ல
தமிழ்நாட்டையே உலுக்கும்
பெரும் பிரச்சனை ஆகிவிடும்
ஆகையால், ஊமையாய் செல்கிறேன்
என் காவிரிப் பெண்ணே !
நம் காதல் அறிந்து
உன் சூரியத் தந்தை உன்னை
சுட்டெரித்துவிடப் போகிறார்!
அதில் பயந்து நீ வற்றிவிடாதே!
உனைக் காண வருவேன் நான்
அடுத்த விடுமுறையில்!
அதுவரை, நீ எனக்காக காத்திரு!
kirukkal by, Sakthi